வேலூர் அருகே அப்துல்லாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக விரிஞ்சிபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வேலூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் குடோனில் ஆய்வு செய்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து இரண்டு டாடா ஏசி வண்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 200 பெட்டியில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த குடோன் ஏழுமலை, அவரது சகோதரர் சக்திவேல் ஆகியோருக்கு சொந்தமானது என்றும், ஏழுமலை மளிகை கடைகளில் பிஸ்கட் டீலர்ஷிப் எடுத்திருப்பதும் தெரியவந்தது. ஏழுமலையின் சகோதரர் சக்திவேல் இந்த குடோனில் இதுபோன்று சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.
குட்கா பதுக்கி வைத்திருந்தவர் போலீஸாருடன் வாக்குவாதம் இதையடுத்து காவல்துறையினர் சக்திவேலை விசாரணைக்காக ஆட்டோவில் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது ஆட்டோவில் ஏறாமல் சக்திவேல் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சக்திவேல் தனது சட்டையை கிழித்துக் கொண்டு காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காவலர்கள் வலுக்கட்டாயமாக சக்திவேல், டாடா ஏசி வாகனத்தை ஓட்டிவந்த நான்கு பேர் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காவலரிடம் சீறிய கா்நாடக முதலமைச்சர் மருமகன்..!