வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (62). இவர் அதே பகுதியில் உள்ள எரியில் தினம்தோறும் மாடு மேய்க்க சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று எரியில் மாட்டை மேய்ச்சலுக்கு விட்டபோது மழை பெய்ததால் அங்குள்ள புதர் பகுதியில் குடை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இதில்மணியின் கை, கால், மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதியில் ஐந்து குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருடைய உடலில் இருந்து ஐந்து குண்டுகள் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.