தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியாத்தம் எம்.எல்.ஏ மீது காவல் நிலையத்தில் புகார்

வேலூர்: அவதூறு பரப்புவதாக திமுக எம்.எல்.ஏ மீது அதிமுக சார்பில் குடியாத்தத்தில் போட்டியிட்ட கஸ்பா மூர்த்தி புகாரளித்துள்ளார்.

திமுக, அதிமுக வேட்பாளர்கள்

By

Published : Aug 24, 2019, 5:03 PM IST

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் காலியாக இருந்த 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மேலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

குடியாத்தம் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக வசமிருந்த குடியாத்தம் தொகுதி திமுகவிற்கு சென்றது. அதன்படி அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் காத்தவராயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தியை தோற்கடித்தார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்களில் சாடி வந்தனர். குறிப்பாக திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த கஸ்பா மூர்த்தியின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் காத்தவராயன்

அதேபோல், பதிலுக்கு கஸ்பா மூர்த்தியும் காத்தவராயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கஸ்பா மூர்த்தி, காத்தவராயன் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார், அந்தப் புகாரில் தன் மீது காத்தவராயன் வீண் அவதூறுகளை பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பதிலுக்கு காத்தவராயனும், தன் மீது அவதூறு பரப்புவதாக கஸ்பா மூர்த்தியின் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த, சம்பவம் குடியாத்தம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தி

இதுகுறித்து, நமது செய்தியாளர் அதிமுகவைச் சேர்ந்த கஸ்பா மூர்த்தியை தொடர்பு கொண்டு பேசியபோது, ”நான் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளேன் அதில் அராஜக விலையில் பொருட்கள் விற்பதாக என் மீது திமுக எம்.எல்.ஏ காத்தவராயன், அவதூறு பரப்புகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளேன்” என்றார். இதுகுறித்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டபோது அவரது மொபைல் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details