வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஐந்து மாதகால அடிப்படைப் பயிற்சியை முடித்த திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 284 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று (டிச.01) நடைபெற்றது. தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கூடுதல் இயக்குநர் ஆபாஷ்குமார் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார்.
முன்னதாக நடைபெற்ற பயிற்சி நிறைவுபெற்ற காவலர்களின் அணிவகுப்பை ஏற்ற தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கூடுதல் இயக்குநர் ஆபாஷ்குமார், சட்ட வகுப்பு, துப்பாக்கி சுடுதல், கவாத்துப் பயிற்சி ஆகிய பாடங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு பதக்கங்களை வழங்கினார். பின்னர் பயிற்சிபெற்ற காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.