வேலூர்:காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நாவலர் மற்றும் செழியன் அறக்கட்டளையும் விஐடி பல்கலைகழகமும் இணைந்து செழியன் நூற்றாண்டு விழாவானது நடைபெற்றது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செழியனின் பாராளுமன்ற உரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு நூல்கள் வெளியிடப்பட்டது இந்த நூலை விசுவநாதன் வெளியிட முன்னாள் தமிழக அமைச்சர் ஹண்டே பெற்றுகொண்டார்.
இந்த விழாவில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வி.கே ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் து.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் பொன்னய்யன், திண்டுக்கல் சீனிவாசன், பத்திரிகையாளர் வைத்தியநாதன் மற்றும் நெடுஞ்செழியனின் குடும்பத்தினர் பல்கலைகழக துணை தலைவர்கள் சங்கர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா பேசுகையில், “நாட்டில் பல புதிய சட்டங்கள் கொண்டு வந்து ஜனநாயகம் மிதிக்கபடுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிக அளவில் உள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார்ப்பரேட்டுகளான அம்பானி, அதானி போன்றவர்கள் மத்திய அரசின் செயலால் வளர்ந்துகொண்டே போகின்றனர்” என மத்திய அரசை குற்றம்சாட்டினார்.
பின்னர் விழாவில் தமிழ் தேசிய இயக்கத்தலைவர் பழ நெடுமாறன் பேசுகையில், ‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை தமிழ்நாடு அரசு என்று தான் சொல்ல வேண்டும். அமைச்சர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அவர்கள் கட்சி சார்ந்து செயல்படாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசாக செயல்பட வேண்டும். அதை போல் தான் தமிழ்நாடு அரசு என அரசை சொல்ல வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான அரசு அதனை கட்சி சார்ந்த அரசாக சொல்ல கூடாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முதல் முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!