வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் வார்டு மறுவரையறை குறித்து அரசியல் கட்சியினர், பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக வார்டுகள் மறுவரையறை செய்வதில் உள்ள குளறுபடிகள் குறித்து விளக்கம் கேட்டு அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினார்கள்.
இதைக் கவனித்த மாநிலத் தேர்தல் ஆணையர் தங்கள் குறைகளை விரிவாக எழுதி மனு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதைப்போல் வார்டு மறுவரையறை செய்யும்போது வாக்குச்சாவடி அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் கூட்டத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
செல்போனில் மூழ்கிய அலுவலர்கள் மாநிலத் தேர்தல் ஆணையர் கலந்துகொண்ட இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் சிலர் மிகவும் அலட்சியப் போக்குடன் செல்போனில் மூழ்கியது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்கச் செய்தது. அதாவது பெண் அலுவலர் ஒருவர் தனது செல்போனில் மிகவும் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதற்கும் ஒருபடி மேலாக மற்றொரு பெண் அலுவலர் அமேசானில் சேலை ஆர்டர் செய்துகொண்டிருந்தார். இது போன்ற ஒரு முக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்கள் செல்போனில் மூழ்கிய சம்பவம் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கி வழிந்த அலுவலர்கள்