வேலூர் : வேலூர் அண்ணாசாலை, அல்லாபுரத்தில் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற பெண்கள் மற்றும் பெற்றோரால் பாதுகாக்க முடியாமல் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பெண்கள் என சுமார் 25 பேர் உள்ளனர். இவர்களில் சிலர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தும், ஒரு சிலர் பணிக்கு சென்றும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில், இந்த பிற்காப்பு இல்லத்தில் இருந்து 18 முதல் 22 வயதுகளுடைய 5 இளம்பெண்கள் பள்ளி சீருடையின் மீது ஸ்வெட்டர் அணிந்தபடி காப்பகத்திலிருந்து தப்பியோடி உள்ளனர்.
இவர்களில், 4 பேர் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து வந்தவர்கள். ஒரு பெண் சேலத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவராவார். இதுகுறித்து அரசு பிற்காப்பு இல்ல கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்களைத் தேடி வருகின்றனர்.