வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ரா. மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி தொடக்க விழா இன்று நூலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட நூலகத்தில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி தொடக்கம்
வேலூர்: மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது, "இன்றைய காலகட்டத்தில் போட்டித் தேர்வு என்பது அவ்வளவு சுலபமான முறையில் இல்லை. அதிலும் பிற மாவட்டங்களைப் ஒப்பிடுகையில் வேலூர் மாவட்டத்தில் இம்மாதிரியான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இல்லை.
போட்டியில் கலந்து கொள்வோரில் பெரும்பாலானோர் பட்டதாரியாக இருப்பினும், தாம் பயின்ற பாடத்திட்டத்திற்கும் தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் போட்டி தேர்வுக்கான பாடத்திட்டத்திற்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த மைய நூலகத்தில் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களை ஆழ்ந்து படித்தாலே போதுமானது. குறிப்பாக தமிழ், வரலாறு, சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தெளிவு அவசியம் என்றார்.