வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்மடுகு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (54). இவர் நேற்று(நவ.08) அதே பகுதியில் உள்ள கடையில் தனியார் நிறுவனத்தின் பாக்கெட் பால் வாங்கிச் சென்றுள்ளார். அதனை குளிர்சாதனப் பெட்டியில் (Refridgerator) வைத்துவிட்டு, இன்று (நவ. 09) காலையில் தனது மனைவி விஜயாவை (45) பாலை எடுத்து டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து டீயை மகாதேவன்,விஜயா, மகன் அருண்( 22) உறவினர் லலிதா (60) ஆகிய நான்கு பேரும் அருந்தியுள்ளனர். பிறகு டீ குடித்த சிறிது நேரத்திலேயே நான்கு பேருக்கும் வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கூச்சலிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று, 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து மயக்கம் அடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.