வேலூர்:காட்பாடியை அடுத்த மகிமண்டலம் ஊராட்சி பெரியபோடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலகிருஷ்ணன் (60). இவரது மனைவி வசந்தா (54). இவர்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான சூளைமேடு பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டின் பின்புறத்தில் கொட்டகை அமைத்து ஆடு, மாடு மேய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஆக.31) அதிகாலை 5 மணியளவில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வசந்தா வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஆட்டை யானை மிதித்துக் கொன்றதை கண்டார். தொடர்ந்து வசந்தா அந்த யானையை விரட்ட முயன்றுள்ளார். அப்போது யானை, வசந்தாவை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதனைப் பார்த்த பாலகிருஷ்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யானையை விரட்டினார்.
இதனையடுத்து அவசர ஊரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் வசந்தாவை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மேல்பாடி காவல் துறையினர், ஆற்காடு சரக வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், வனத்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக ஆந்திரா வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “ஆந்திர மாநில வனப்பகுதியில் யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்துக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் சுற்றித்திரிந்ததுடன் அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது. புதன்கிழமை அதிகாலை அப்பகுதியில் கார்த்தி என்கிற இளைஞரை தாக்கியதுடன், அங்கு வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வெங்கடேஷ், செல்வி தம்பதியையும் மிதித்துக் கொன்றது.
இதையடுத்து, ஆந்திர வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டியடித்ததால் அந்த யானை ஆந்திரா எல்லைப் பகுதியை கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. பின்னர், வேலூர் மாவட்டம் காட்பாடி, பொன்னை, மகிமண்டலம் என தமிழகம்,ஆந்திர எல்லை பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த யானையை இன்று அதிகாலை பெரியபோடிநத்தத்தில் வசந்தா என்ற பெண்ணை மிதித்து கொன்றுள்ளது” என்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் முகாமிட்டிருந்த அந்த காட்டு யானையை பிடிக்க நன்னியாலம் முகாமில் இருந்து இரு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. பின்னர், மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அந்த யானையை திருப்பதியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் விடவும் ஆந்திர வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மும்பையில் திரண்ட 'I.N.D.I.A' கூட்டணி கட்சிகள்.. பாஜகவிற்கு நெருக்கடி தருமா?