வேலூர்: அணைக்கட்டு வட்டம் தேவிசெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் இந்திய விமான படையின் தாம்பரம் பிரிவில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ஹேமா (21). இவர்களுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையொட்டி, ஹேமா தனது தாய் வீடான அணைக்கட்டு வட்டம் ரெட்டியூரில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தையைப் பார்க்க கடந்த ஜூலை 9 அன்றிரவு ரெட்டியூருக்கு வந்திருந்த மணிகண்டன், குழந்தை தனது ஜாடையில் இல்லை எனக்கூறி ஹேமாவிடம் ஜூலை 10 அன்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன், பிளேடால் பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பலத்த காயமடைந்த குழந்தையை ஹேமாவும், அவரது குடும்பத்தினரும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், மணிகண்டனின் கைப்பேசி சிக்னலைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் அவர் சென்னை தாம்பரத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மணிகண்டனின் தாயையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் ஹேமா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, "தற்போது அணைக்கட்டு அருகே ரெட்டியூர் கிராமத்தில் உள்ள என் தாய் வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கு கடந்த ஜூலை 9 அன்று DC குப்பத்தைச் சேர்ந்த வெங்கடசாமி - லட்சுமியம்மாள் தம்பதியின் மகன் மணிகண்டனுக்கு பெரியோர்களால் முறைப்படி திருமணம் செய்து வைத்தார்கள்.
என் கணவர் மணிகண்டன் சென்னை தாம்பரத்தில் உள்ள Air force mess ஊழியராக வேலை செய்கிறார். திருமணமான பிறகு என் கணவரும், நானும் தாம்பரம் இந்திரா நகரில் தனிக்குடித்தனமாக வசித்து வந்தோம். திருமணமாகி மறு மாதமே நான் கர்ப்பமானேன். நான் கர்ப்பம் ஆன பிறகு என் கணவர் என் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து அடிப்பார். இதனை அடுத்து என் பெற்றோர் வந்து என் கணவரிடம் பேசியபோது இனிமேல் சந்தேகபடமாட்டேன், தகராறு செய்யமாட்டேன் என்று சொல்லி எனது பெற்றோரை அனுப்பிவிட்டார்.