வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காந்திநகர் பகுதியில் வசித்துவருபவர் வெங்கடேஷ் (40). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியில் வசித்துவரும் திருச்செல்வனுக்கும் இடையே நிலம் சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை தகராறு முற்றியபோது, திருச்செல்வன், அவருடைய மகன்கள் சதன் குமார், அறிவுச்செல்வன், காளியப்பன் ஆகியோர் வெங்கடேஷ் குடும்பத்தினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் வெங்கடேஷ், அவரது குடும்பத்தினருக்கு வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து வெங்கடேஷ் காவல் துறையினரிடம் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் இன்று காந்தி நகர் பகுதியில் உள்ள 60 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேசிய வெங்கடேஷ் தனது பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரை கண்டித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் வெங்கடேஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலப் பிரச்னைக்கு தற்கொலை முயற்சி