தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியர் ராமன் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனு அளித்துச் சென்றனர்.
அந்த மனுவில், 'வேலுார் மாவட்டத்தில் நிலவிவரும் வறட்சியால் நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி சேதமடைந்த பயிர்களை அலுவலர்கள் பார்வையிட வரவில்லை. இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்த பிறகும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையைப் போல விவசாயிகளுக்கும் ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு பத்தாயிரம் வழங்க மாநில அரசிற்கு பரிந்துரை செய்தும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்தும் நிவாரணம் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை