வேலூர்: அணைக்கட்டு வட்டத்தில் சாலை வசதியில்லாத மலைக்கிராமத்தில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் விவசாயியின் வாயில் வாகனத்தின் இரும்பு கம்பிகள் குத்தி அவர் இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் மயங்கியநிலையில் கிடந்துள்ளார். மலைக்கிராமத்தில் சாலை வசதியில்லாததால் குழந்தை உயிரிழந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரை அடுத்த மலைப்பகுதியிலுள்ள பீஞ்சமந்தை ஊராட்சி புதூர்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி (36) விவசாயி. இவர் புதன்கிழமை ஒடுகத்தூர் பகுதியில் இருந்து அரிசி மூட்டை எடுத்துக்கொண்டு மலைப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
மலை கிராமத்துக்கு செல்லும் வழி கரடுமுரடான சாலையாக இருந்ததால் அவர் சாலையின் அருகிலுள்ள பள்ளத்தில் வாகனத்துடன் தவறி கீழே விழுந்தார். எதிர்பாராத விதமாக அவர் வாகனத்துடன் தடுமாறி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்த இரும்பு கம்பிகள் சிவமூர்த்தியின் வாயில் குத்தின. இதனால் பலத்த காயமடைந்த சிவமூர்த்தி மயங்கிய நிலையில் இரவு முழுவதும் மலைப்பகுதியில் ஒரே இடத்தில் கிடந்துள்ளார்.
வியாழக்கிழமை காலை வரை சிவமூர்த்தி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தபோது மலைப்பாதை அருகே சிவமூர்த்தி காயமடைந்த நிலையில் மயக்க நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரது உறவினர்கள் சிவமூர்த்தியின் வாயில் குத்தியிருந்த இரும்பு கம்பியை எடுக்க முடியாமல் இரும்பு வெட்டும் இயந்திரத்தை கொண்டு கம்பியை இரண்டாக அறுத்து அவரை மீட்டனர்.
பின்னர், அவர் ஒடுகத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அணைக்கட்டு வட்டத்தில், அல்லேரி ஊராட்சி அத்திமரத்துக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விஜி, பிரியா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்காவை கடந்த 27ஆம் தேதி இரவு விஷ பாம்பு கடித்தது.
உடனடியாக அந்த குழந்தையை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போதிய சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து உடல் முழுவதும் விஷம் பரவி குழந்தை உயிரிழந்தது.
பின்னர், உடல்கூறு ஆய்வு முடித்து அளிக்கப்பட்ட குழந்தையின் உடலையும் சொந்த கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடியாமல் உடலை பெற்றேறார் 10 கி.மீ. தூரம் கைகளிலேயே சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக பீஞ்சமந்தை மலைக்கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் விவசாயி ஒருவர் விபத்துக்குள்ளாகி யாரும் பார்க்காமல் அந்த இடத்திலேயே கிடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவாக செயல்படுத்திட வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமி மரணம் எதிரொலி.. அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்க அளவீடு பணி.. மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம்!