வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வழக்கம்போல் குறைதீர் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றதால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிலையில் தேசிய உழவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயி சதானந்தம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் காலிக் கவர்களுடன் மனு அளிப்பதற்காக வந்ததால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, சாராயக் கவர்களை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என்று காவல்துறையினர் அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு சதானந்தம், "கள்ளச்சாரய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இதுவரை மாவட்ட ஆட்சியரிடம் 150 முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் தனது மனுவை அவர் அளித்தார்.