திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஆரோசூர் பகுதியை சேர்ந்தவர் முரளி(45). இவர் வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் முரளியின் மனைவி பரிமளா (35), மகள்கள் நித்தியா(18), பிரியா(19), பிரியாவின் கணவர் ராமு (21) ஆகியோரை தனது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக கண்ணன் வேலை வாங்கி வந்துள்ளார். இதில் பிரியா என்பவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
இவர்கள் அனைவரும் சேர்த்து வாரத்துக்கு ரூ.500 மட்டுமே கண்ணன் வழங்கி வந்துள்ளார். மேலும், வெளியே எங்கும் செல்ல விடாமல் மிரட்டி வந்துள்ளார். அவசரத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக கூட செல்ல விடாமல் கண்ணன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கொத்தடிமை மறுவாழ்வு சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.