இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் ஆட்சியர் சண்முக சுந்தரம் பேசுகையில்,
"அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் சிலரது பெயரில் போலியாக மின்னஞ்சல் ஐடி தொடங்கி, ஏனைய அலுவலர்கள், பெரும் நிறுவனங்களுக்கு "எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா" என்ற தகவல் அனுப்பி ஒரு சிலர் தவறான வழிமுறையைப் பின்பற்றிவருகின்றனர்.
இது தொடர்பாக வேலூரில் உள்ள குறிப்பிட்ட அலுவலகத்திலிருந்து எனக்குத் தகவல் வந்தது. அதனை ஆய்வு செய்தபோது அது என்னுடைய மின்னஞ்சல் ஐடி இல்லை என்றும், என்னுடைய மின்னஞ்சல் ஐடி போன்று ஒரு போலி ஐடி என்றும் தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளோம்.
இது போன்ற தகவல்கள் வந்தால் யாரும் அதற்குப் பதிலளிக்க வேண்டாம்" என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வேலூர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி எ.டி. ராமச்சந்திரனின் பெயரில் முகநூல் கணக்குத் தொடங்கி பணம் பறிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.