தமிழ்நாடு

tamil nadu

அதிக வட்டி தருவதாகக் கூறி 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி - வேலூரில் அமலாக்கத்துறை சோதனை

By

Published : Jul 6, 2023, 4:50 PM IST

ஐ.எஃப்.எஸ். நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக்கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

enforcement directorate raids premises of ifs directors in vellore
அதிக வட்டி தருவதாக கூறி 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி : வேலூரில் அமலாக்கத் துறை சோதனை

வேலூர்: காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ். நிறுவனம் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ். நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை, அதாவது, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.8,000 வரை வட்டி தருவதாகக் கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அந்த நிறுவனம், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில், தனது நிறுவனத்தின் சார்பில், ஏஜென்டுகளை நியமித்தது.

இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பில் மயங்கிய மக்கள், ஏஜென்டுகளின் வாயிலாக, பணத்தை முதலீடு செய்தனர். இதன்மூலம், இந்நிறுவனம், பல ஆயிரம் கோடி பணத்தை வாரிக் குவித்தது. குறிப்பிட்ட காலம் வரை பொதுமக்களுக்கு வட்டிப் பணம் வழங்கிய நிதி நிறுவனம் திடீரென பணம் தராமல் நிறுத்தியது.

இதுதொடர்பாக, முதலீட்டாளர்கள் அளித்தப் புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். வட மாவட்டங்களில் ஐ.எஃப்.எஸ். நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ. 6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்து உள்ளது.

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் சுமார் ரூ.6,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்கள் வீடுகளில் டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்துவாச்சாரி, காட்பாடி மற்றும் மேல்பாடி ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். அரக்கோணம் அருகே ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன முகவர் குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதன் நிர்வாக இயக்குநர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். இதில் இயக்குநராக இருந்த ஜனார்த்தனன் என்பவருடைய மாமியார் வசந்தகுமாரி வீடு அமைந்து உள்ள காட்பாடியில் சோதனை நடைபெற்று வருகிறது.

நிதி நிறுவன இயக்குநர்கள் ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். நிதி மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன இயக்குநர்களுக்கு ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பா.ஜ., கட்சியில் தொடரும் அதிரடி: மேலும் 4 மாநில கட்சி தலைமைகளை மாற்ற திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details