வேலூர்:தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து வருமான வரித்துறையினர், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில், அந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கம் உள்பட சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, அந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கதிர் ஆனந்தின் நெருங்கிய உறவினர் வீடு, சிமெண்ட் கிடங்கு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடியை பறிமுதல் செய்தனர். இதனால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், அந்தத் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது.