திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள மாச்சம்பட்டு காப்புக்காட்டு பகுதிகளான மிட்டாளம், பாலூர், பந்தேரிப்பள்ளி, பைரப்பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து நாள்களாக யானைக்கூட்டம் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது.
இப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்ட வாழை, தக்காளி, உளுவல், தென்னை, நெல், உள்ளிட்ட பல பயிர்களை யானைக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சேதப்படுத்த தொடங்கியது. இதனால், அன்று முதல் வனத்துறையினர் யானைக்கூட்டத்தை விரட்ட பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை மாச்சம்பட்டு பகுதியில் உள்ள விளைநிலங்களில் யானைக்கூட்டம் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைக்கூட்டத்தை விரட்டினர்.
ஆனால், யானைக்கூட்டம் பல்வேறு விளைநிலங்கள் வழியாக அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்ததால், யானைக் கூட்டம் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அங்காங்கே யானைக்கூட்டத்தை மக்கள் கண்டதாக வந்த தகவலின் அடிப்படையில் மாச்சம்பட்டு, பாலூர், மிட்டாளம், ஆகிய பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.