வேலூர்: வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு நாள்தோறும் சென்னை புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளச்சேரியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படுகிறது. அதேநேரம், இந்த மின்சார ரயில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும். இந்த நிலையில், நேற்று (ஜூன் 27) மாலை 5.35 மணிக்கு வேளச்சேரியில் இருந்து இந்த மின்சார ரயில் வழக்கம்போல் புறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தாமல், அரக்கோணத்தில் வந்து ரயில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆத்திரம் அடைந்த நிலையில், இன்ஜின் ஓட்டுநர் ஜோஸ்வா மற்றும் கார்டு தியாகராஜன் ஆகியோரிடம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது பயணிகள், ‘உங்களுக்கு எப்படி சிக்னல் கிடைத்தது? சிகப்பு சிக்னல் எரிந்துதானே இருக்கும். எந்த ஞாபகத்தில் நீங்கள் ரயிலை இயக்கினீர்கள்? கார்டும் சிக்னலை பார்க்கவில்லையா? இது போன்று ரயிலை இயக்கினால் விபத்து நேரிடாதா?’ என இன்ஜின் ஓட்டுநர் மற்றும் கார்டிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு இன்ஜின் டிரைவர், ’ஞாபக மறதியில் விரைவு மின்சார ரயில் என்றும், புளியமங்கலத்தில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் இல்லை என நினைத்து வேகமாக இயக்கி விட்டேன். என்னை மன்னிக்கவும்’ என தெரிவித்து உள்ளார்.