வேலூர்:வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளில் அதிரடி சோதனை செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் பாலாற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 12ஆம் தேதி) திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி, அங்கு மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக ரசீது போடவில்லை என்றும் புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் குவாரி ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்க துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:மேகதாது அணைக்கு அனுமதி தொடர்பாக கர்நாடக முதலமைச்சரின் பேச்சு ஆபத்தானது- ராமதாஸ் அறிக்கை!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் பாலாற்றிலுள்ள மணல் குவாரியிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதையொட்டி, அமலாக்கத் துறையினர் 6 பேர் செவ்வாய்க்கிழமை (செப்.12) காலை திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர். உடனடியாக மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதனால், மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அமலாக்கத்துறை சோதனையின் போது மணல் குவாரியில் இருந்த அனைத்து லாரிகளும் வெளியேற்றப்பட்டது. வேலையாட்கள் யாரும் அங்கே வேலை செய்ய வேண்டாம் என தெரிவித்து மணல் குவாரியில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றினர். கந்தனேரி மணல் குவாரியில் அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனை காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:சென்னையில் செந்தில் பாலாஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை வீடு வீடாக தேடும் அமலாக்கத்துறை அதிகாரிகள்!