வேலூர்:வெறும் மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் நடுத்தரக் குடும்பத்தின் வீட்டில் வழக்கமாக 65 ரூபாய் முதல் 300 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்துகொண்டிருந்த நிலையில், இந்த மாத மின்கட்டணம் ரூ.1,60,642 என வந்து அக்குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
முத்து மண்டபம் பகுதி டோபி கானாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்டம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் 24ஆவது வீட்டில் வசித்து வருபவர் ராணி அம்மாள். மொத்தம் 3 பேர் மட்டுமே வீட்டில் வசித்து வரும் சூழலில் கடந்த மாதம் ரூ.95 மின் கட்டணம் வந்துள்ளது.
ரூ.1லட்சத்தைத் தாண்டிய மின் கட்டணம்:இந்நிலையில், இந்த மாதத்துக்கான மின் அளவீடு நேற்று(மே 4) செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த மாதத்துக்கான கட்டணம் ரூ.1,60,642 என எழுதியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைத்தவர்கள் இது குறித்து மின் கணக்கீட்டாளரிடம் கேட்டதற்கு "இந்த அளவுக்கு மீட்டர் ஓடியிருப்பதாகக் கூறி சென்றுள்ளார்". பின்னர் இது தொடர்பாக நேற்றே மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து இன்று(மே 5) சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் ராணி அம்மாள் வீட்டு மீட்டர் பாக்ஸை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரியத்து அலுவலர்கள் கூறுகையில், “ராணி அம்மாள் மீட்டரில் பழைய அளவு 1756ல் இருந்து திடீரென 26420-க்கு மின் அளவு மாறியுள்ளது. ஜம்ப் ஆகியுள்ளது (கிரீடிங்). இதன் காரணமாகவே மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் அளவு மாறியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.