வேலூர்:Earth quake at vellore: பேர்ணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளான தரைகாடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தொடர் நில அதிர்வு உணரப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று(டிச 24) இரவு முதல் இன்று(டிச 25) வரை சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அச்சம் அடைந்து குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வீடுகளில் விரிசல்
நில அதிர்வு காரணமாகத் தரைகாடு பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அச்சத்தால் மக்கள் தெருக்களிலும், மைதானங்களிலும் குடும்பத்தோடு தஞ்சமடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”கடந்த 21ம் தேதி முதல் எங்கள் பகுதியில் பெரும் சத்தத்தோடு நில அதிர்வு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்து வருகிறது. நாங்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளோம்.
நிம்மதியாக உறங்கவும், வீட்டிற்குள் இருக்கவும் முடியவில்லை. அதனால் மைதானத்தில் தங்கி உள்ளோம். குளிரில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. வரும் அரசு அலுவலர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, காரணத்தையும் சொல்ல மறுக்கிறார்கள். இதனால் பீதியிலேயே உள்ளோம். இன்று மட்டும் காலை 9.41 மணி முதல் 11 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் பெரிய வெடி வைத்தால் எப்படி சத்தம் வருமோ அது போன்று வருகிறது” என அச்சத்துடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் கணபதி ஆகியோர் தரைகாடு பகுதியில் இன்று(டிச 25) நேரில் ஆய்வு மேற்கொண்டு விரிசல் ஏற்பட்ட வீடுகளைப் பார்வையிட்டனர். மேலும் தரைகாடு பகுதிக்கு அருகில் ஏதேனும் கல்குவாரியோ, பெரிய கிணறுகளோ இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 2 முறை பாறை மோதும் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. ஆய்வுக்குப் பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், ”நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படும் தரைக்காடு பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வின் போதே வெடிச் சத்தம் போன்ற ஒரு சத்தத்துடன் நில அதிர்வை நாங்களும் உணர்ந்தோம்.
பாதிக்கப்பட்ட வீடு மற்றும் மோசமான வீடுகளில் குடியிருக்கும் மக்களைப் பாதுகாப்பாக அரசு முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் அளிக்க உள்ளோம். எதனால் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுக்கான இயந்திரங்களை வரவழைத்து மேலும் ஆய்வு செய்ய உள்ளோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்”என்று தெரிவித்தார்.
நில அதிர்வுக்கு காரணம் என்ன?