தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேர்காடு பகுதி மாடல் சிட்டியாவதே எனது கனவு - அமைச்சர் துரைமுருகன் பேச்சு - திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகம்

தேர்தல் வாக்குறுதியாக அளித்தபடியே, சேர்காடு பகுதியில் மேம்பாலத்துடன் சாலை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மருத்துவமனை ஆகியவைகளை நிறைவேற்றும் விதமாக இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், சேர்காடு பகுதியை மாடல் சிட்டியாக மாற்றுவதே தனது கனவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 10, 2023, 6:12 PM IST

சேர்காடு பகுதி மாடல் சிட்டியாவதே எனது கனவு - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர்: காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேர்காடு பகுதியில் உயர் கல்வித்துறை சார்பில் ரூ.12 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சேர்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் 14 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் உள்ளிட்டவைகளுக்கான அடிக்கல் இன்று (பிப்.10) நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'காட்பாடியில் உப்புத்தண்ணீர் என்பதால் யாரும் பொண்ணு கொடுக்க மாட்டார்கள்; முதலில் பாலாற்று நீரைக் கொண்டு வந்துள்ளோம். பிறகு காவிரி நீரைக் கொண்டு வந்தோம். அவ்வாறு காவிரி நீர் கிடைக்காத இடங்களுக்கு விரைவில் அவை கொண்டுவரப்படும்' என்றார். மேலும், 'வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பொன்னை ஆறு மேல்பாடி பாலம் கட்ட பணம் ஒதுக்கிவிட்டேன்; விரைவில் அதற்கும் அடிக்கல் நாட்டப்படும்' என்று கூறினார்.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட இந்த அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகளைக் கொண்டதாகவும், மேலும் இங்கு 100 படுக்கைகள் கொண்டுவரப்படும் எனவும்; அதற்கான வசதிகள் விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டுக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி இந்த ஆண்டுக்குள், இதே சேர்காடு பகுதியில் ஒரு 'சிப்காட்' கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், கலைஞர் கருணாநிதி வாங்கி வைத்த 100 ஏக்கர் நிலத்தில், IT பார்க் DELL தொழிற்சாலைக்கு அருகே கொண்டு வருவேன் என்று தெரிவித்தார்.

சேர்காடு மாடல் சிட்டி - கனவு:மேலும் பேசிய அவர், 'என்னால் முடிந்ததை இந்த தொகுதிக்கு தொடர்ந்து செய்வதாகவும், இந்த அரசு கலைக்கல்லூரி கட்டடம் சுற்றுச்சுவருடன் விரைவாக கட்டப்படும் என்றும்; சேர்காடு பகுதியை மாடல் சிட்டியாக மாற்ற வேண்டும் என்பது எனது கனவு' எனப் பேசினார்.

முன்னதாக அமைச்சர் பொன்முடி பேசுகையில், ’தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 20 மாதங்களில் புதியதாக 31 அரசு கல்லூரி அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒன்று. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் 'புதுமைப்பெண் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஆண்களைக் காட்டிலும் அதிகம் பெண்களே உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இதுதான் 'திராவிட மாடல் ஆட்சி' ' எனப் பேசினார்.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தேர்தல் சமயங்களில் அமைச்சர் துரைமுருகன் இந்த இரண்டு வாக்குறுதிகளை கூறியிருந்ததும், காட்பாடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் இந்த இரண்டு கோரிக்கைகளும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'காவலரிடமே கைவரிசையா'... காவல் துறை வாகனத்தை திருடியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details