தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இனி பழைய துரைமுருகனைப் பார்க்கப் போறீங்க; நான் உங்களுடைய அமைச்சர்!' - உள்ளாட்சித் தேர்தல்

பழைய துரைமுருகன்போல ஒவ்வொரு வீடாகச் சென்று குறைகளைக் கேட்டறிந்து அக்குறைகளை நிவர்த்திசெய்வேன் என அமைச்சர் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்
துரைமுருகன்

By

Published : Oct 2, 2021, 12:43 PM IST

Updated : Oct 2, 2021, 1:33 PM IST

வேலூர்: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு இந்தத் தொகுதியில் (கே.வி. குப்பம்) வாக்களித்திருந்தால் இந்த ஆண்டு கல்லூரி கொண்டுவரப்பட்டிருக்கும் என துரைமுருகன் பேசியுள்ளார்.

கே.வி. குப்பம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துரைமுருகன் நேற்று (அக்டோபர் 1) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "இங்கு வந்துள்ள பலர் கரோனா தடுப்பூசி போடவில்லை எனக் கருதுகிறேன்; அது பெரிய தவறு. ஆள் உயிரோடு இருந்தால்தான் வாக்களிக்க முடியும்; இல்லையென்றால் வாக்களிக்க முடியாது.

யார், யார்? இரண்டு தவணை கரோனா தடுப்பூசி ஊசி போடவில்லையோ அவர்கள் உடனடியாக ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் கரோனா வேகமாக வரும் எனக் கூறுகிறார்கள். இரண்டு ஊசி போட்டவர்களுக்கும் கரோனா வரலாம், ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்காது.

தடுப்பூசி போடவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும். ஆகவே உங்களுக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை - அக்டோபர் 3) உங்கள் ஊர்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தச் சொல்கிறேன். அதில் நீங்கள் போய் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.

நான் உங்களுடைய அமைச்சர் - எக்குறை இருப்பினும் சொல்லுங்கள்

தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முகம் தெரியாத ஒருவருக்கு வாக்களித்தீர்கள். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. நான் கடந்த முறை அமைச்சராக இருந்தபோது 32 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத் தந்தேன்.

நாங்கள் ஆட்சியை விட்டுப் போனவுடன் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற்ற நபர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை எனக் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் உங்கள் குறைகளை நான் தீர்த்துவைப்பேன்.

காரணம் கடந்த எட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தீர்கள். அந்த நன்றிக்காக நான் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன். எனவே உங்களுக்கு எம்எல்ஏ இல்லை என்ற குறை வேண்டாம். துரைமுருகன் உங்களுடைய எம்எல்ஏ உங்களுடைய அமைச்சர், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்.

லத்தேரியில் ஏன் கல்லூரி வரவில்லை?

இந்தப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அன்னங்குடி ஏரிக்கு நீர் வர வேண்டும். எனவே பசுமாத்தூர் அருகே 45 கோடி ரூபாயில் அணை ஒன்றைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு இந்தப் பகுதியில் நீர் பற்றாக்குறைத் தீர்க்கப்படும்.

தற்போது மோர்தானா அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும்பட்சத்தில் அந்த நீரை அப்படியே அன்னங்குடி ஏரிக்குத் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

லத்தேரி பகுதியில் கல்லூரி வேண்டும் எனப் பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு இந்தத் தொகுதியில் வாக்களித்திருந்தால் இந்த ஆண்டு கல்லூரி கொண்டுவரப்பட்டிருக்கும்.

இனி பழைய துரைமுருகன்போல...

இருந்தாலும் அடுத்த ஆண்டு லத்தேரி பகுதியில் கல்லூரி கொண்டுவரப்படும். லத்தேரி பகுதியில் தொழில்வாய்ப்பைப் பெருக்க அரசு நிலத்தைக் கண்டறிந்து சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தீர்கள்.

இனி ஜென்மத்துக்கும் அவர்கள் இந்தப் பக்கம் வர மாட்டார்கள். எனவே பழைய துரைமுருகன்போல ஒவ்வொரு வீடாகச் சென்று குறைகளைக் கேட்டறிந்து அனைத்துக் குறைகளையும் மாவட்ட ஆட்சியரைக் கொண்டு நிவர்த்தி செய்வேன்" என்றார்.

இதையும் படிங்க:சத்துணவுத் திட்டத்தை பிச்சையெடுப்பதோடு ஒப்பிட்ட கருணாநிதி

Last Updated : Oct 2, 2021, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details