அமைச்சர் துரைமுருகன் பேட்டி வேலூர்:வேலூரில் நடைபெற்ற கட்சி பவள விழாவில் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "கலைஞர் நூற்றாண்டு விழாவுடன், கழகத்தின் பவள விழா மற்றும் கட்சியின் முப்பெரும் விழாவை இணைத்து வேலூரில் பெரு விழாவாக நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் எனவும், இது வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத பெருமை எனவும், இதனால் மற்ற மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வித்தியாசப்படுகிறது என்றார்.
திமுகவிற்கு இது பவளவிழா ஆண்டாகும். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தான் நூற்றாண்டை கடந்த கட்சி அதற்கு அடுத்ததாக தி.மு.க. பவளவிழாவை கொண்டாடுகிறது என்றார். 75 ஆண்டுகளில் திமுகவில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஆகியோர் பொதுச் செயலாளராக இருந்துள்ளனர். நான்காவதாக உங்கள் ஆதரவுடன் நான் பொதுச் செயலாளராக உள்ளேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பவளவிழா கூட்டம் முடிந்த பிறகு ஒவ்வொரு தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்த கூறியுள்ளேன் எனவும், அதில் கட்சி தொண்டர்கள் கூறும் குறைகள் களையப்படும் எனவும், தேர்தல் வருகிறதோ, இல்லையோ நாம் அதற்கு ஆயத்தமாக வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஒரே நாடு ஒரே சட்டம் கூட்டம் போட்டிருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், "அதற்காக கூட்டி இருக்கிறார்களா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் இன்னும் சரியான உறுதியான தகவல் வரவில்லை அப்படி இருந்தால் அதில் சட்ட சிக்கல் உள்ளது எனவும், எப்ப செய்யப் போறாங்க எது செய்யப் போறாங்கன்னு ஒன்றும் தெரியவில்லை என்றார். தமிழகத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக இப்பொழுது ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக எப்பொழுதுமே அவர்களோடு அலையன்ஸ் போரவர்கள் கொஞ்ச நாள் பொறுத்து போவார்கள் ஆனால் இப்பொழுது உடனே போகிறார்கள் என்றார்.
கர்நாடகா காவிரியில் இருந்து 5000 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்காக மேல்முறையீடு போகும் என்று சித்தராமையா கூறியிருந்தார். கர்நாடகா மேல்முறையீட்டுக்கு சென்று இருக்கிறார்கள் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு வழக்கு செ.6ல் உச்சநீதிமன்றத்தில் வரும் என்றார். பாஜக எங்களை எதிர்த்து பிரச்சாரங்களை செய்கிறார்கள் எனவும், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை எனக் கூறினார்.
தமிழகத்தில் சாலைகள் சரி இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அதற்கு காரணம் திமுக ஆட்சி தான் என்கிறார், ஆனால் ராணிப்பேட்டை கீழுள்ள சாலை மற்றும் சென்னை செல்லும் சாலைகளில் ஆங்காங்கே அனைத்து மேம்பாலங்களும் அம்போன்னு நிக்குது எனவும், அனைத்து இடங்களிலும் சாலைகள் கொத்தி போடப்பட்டுள்ளன. இந்த வேலைகளை யார் விட்டது அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி விட்ட வேலை தான் எனவும், தற்போது நாங்கள் அதை எடுத்து நடத்துகிறோம் ஏன்? அந்த மேம்பாலத்தை கட்ட வேண்டாம் என பலர் தெரிவித்தனர் என்றார். நடுரோட்டில் நந்தி மாறி நிற்கிறது இதற்கு அவர் பதில் சொல்லட்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதையும் படிங்க:'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்த சாத்தியமில்லை: சபாநாயகர் அப்பாவு