வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45). இவர் நேற்று காலை சுமார் 5 மணியளவில் மாதனூர் அருகே லாரி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக லாரியில் மோதி உள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்ட நிலையிலும் ரத்தம் வழிவது நிற்காமல் இருந்துள்ளது. மேலும், தலையில் கடுமையான வலியும் இருந்துள்ளது.
இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் கார்த்திகேயனை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது தலையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். அதாவது, ஸ்கேன் செய்து பார்த்ததில் கார்த்திகேயனின் தலையில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு ‘நட்டு’ ஒன்று இருப்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், கார்த்திகேயனின் தலையில் போடப்பட்ட தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். மேலும், தொற்று காரணமாக அவருக்கு 2 நாட்கள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.