வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி மாவட்ட ஒன்றியக்குழு சேர்மன் பதவிகளை கைப்பற்றியுள்ளது.
அணைக்கட்டு, கணியம்பாடி, கே.வி. குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு, வேலூர் ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலானது முதல் கட்டமாக 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 9-ம் தேதியும் நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று (அக் 12) காலை 7 மணிக்குத் தொடங்கியது.
வேலூரில் மொத்தமாக 14 மாவட்ட கவுன்சிலர், 138 ஒன்றிய கவுன்சிலர், 247 ஊராட்சி மன்றத் தலைவர்கள்; 2,079 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், என மொத்தமாக 2,428 பதவிகளுக்குத் தேர்தலானது நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில், வேலூரில் உள்ள 7 ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கை, அந்தந்த ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், பள்ளிகளில் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கிய எண்ணிக்கையானது இன்று அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 2,975 பணியாளர்கள் ஈடுபட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு பெட்டி வாக்குகள் எண்ணப்பட்டன.
எண்ணிக்கையின் போது வாக்குவாதம்
அணைக்கட்டு ஒன்றியத்திலும், கே.வி.குப்பம் ஒன்றியத்திலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், அதிகாரிகளுக்கும் இடையே வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோன்று சில இடங்களில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.