வேலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். கூட்டத்தில் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் போராடுவதால் தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடும்பொழுது அமைதியாகத்தான் செல்கிறது" என்று கூறினார்.
மேலும், ஏழு தமிழர்கள் விடுதலைத் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் ஜீரோவுக்கு சமமானது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறித்து கேள்விக்கு, தீர்மானத்தை மட்டும் ஜீரோ என்று அவர்கள் சொல்லவில்லை தமிழ்நாடு அமைச்சரவையையும் ஜீரோ என்று சொன்னதற்கு அர்த்தம் என்று பதிலளித்தார்.