வேலூர்: காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும், திமுக பொது உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் சிலைகளை நீதிமன்றங்களில் வைக்கவும், சட்டமேதை அம்பேத்கரின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது எனவும்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு; “நான் இன்னும் இந்த சுற்றறிக்கையைப் பார்க்கவில்லை. பார்த்தவுடன் பதில் சொல்கிறேன்” என்றார்.
மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,"பிரதமர் மோடியே சொன்னார். நாடே வெட்கி தலை குனிகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஆச்சரியம் தான்,"என்றார்.