சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி திமுக நகரப் பொறுப்பாளர் ஒருவர் மீது அவர் மனைவியே சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தது உள்ளூர் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்தப் புகாரில் தனது கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பிருப்பதாகவும், அதனால் தன்னை அவர் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் கட்சித் தலைமையிடம் சென்றது திமுகவினரின் பல்சை எகிறவைத்தது.
தனக்கு நிகழ்ந்ததைப் புகாரின் மூலம் விவரிக்கும் அப்பெண், “நானும் எனது கணவர் சாரதி குமாரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். ஆனால் அதன்பிறகுதான் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரியவந்தது.
சாரதி குமார் - ரம்யா திருமணம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எனது கணவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. ஆனால், அவர் எனது கணவரை விட வயது மூத்தவராக இருந்தபோதிலும் இருவரும் ’நெருங்கி’ பழகி வருகின்றனர். மேலும் பெண்கள் பலரை எனது கணவருக்கு அவர் அறிமுகம் செய்துவருகிறார். இது தெரிந்தவுடன் எனது கணவரிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு முறையாகப் பதிலளிக்காமல், என்னை அடித்து துன்புறுத்தினார்.
இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். என்னை தற்கொலை செய்து கொள்ளும்படியும் தொடர்ந்து வற்புறுத்திவருகிறார். ஒருவழியாக எனது கணவரிடமிருந்து தப்பித்த நான், என் பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தேன். என் கணவர் திமுகவில் நகரப் பொறுப்பாளர் என்பதால், திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அறிவாலயம் வந்த அவரது கணவர், அவரின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அப்பெண் குற்றம் சுமத்தியுள்ளார். தனது கணவர் மீதும் அவருடன் தொடர்பிலிருக்கும் அந்தப் பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அறிவாலயத்திலேயே இந்தச் சம்பவம் அரங்கேறியதால், ஸ்டாலின் சாரதி குமாரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தாகக் கூறப்படுகிறது. கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும்படி நடந்துகொண்டதால், உடனடியாக பதவியை ராஜினாமா செய்யுமாறும் தலைமை வலியுறுத்தியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக, சில தினங்களுக்கு முன் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், குடும்பச் சூழல் காரணமாக நகரப் பொறுப்பாளர் பதவியிலிருந்து சாரதி குமார் விலகுவதாக செய்தி வெளியானது.
இதற்கிடையே, மனைவியை வன்கொடுமை செய்த புகாரில் சிக்கி, தலைமையின் அழுத்தம் காரணமாக பதவியைப் பறிகொடுத்த சாரதி குமாருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவாகப் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பதவி பறிபோன ஏமாற்றத்தில், வேலூரிலுள்ள துரைமுருகன் இல்லத்திற்கு சென்று மீண்டும் பதவி கிடைக்க உதவுமாறு, தனது ஆதரவாளர்களை வைத்து சாரதி குமார் தூதுவிட்டுள்ளார் என்ற தகவலும் கசிகிறது. அவர் ஏன் துரைமுருகனுக்கு தூதுவிட்டார் என்பதற்கும், அந்த வீடியோவில் துரைமுருகனே விடையளித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றிபெறுவதற்கு களத்தில் இறங்கி தீவிரமாக வேலைசெய்துள்ளார் சாரதி. தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று, கதிர் ஆனந்த்தை எம்பியாக்கியதில் பெரும்பங்கு வகித்திருக்கிறார் சாரதி. அதன் வெளிப்பாடாகவே துரைமுருகனின் ஆதரவும் அமைந்துள்ளது என விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வீடியோவில் சாரதியின் ஆதரவாளர்களிடம் பேசிய துரைமுருகன், “என்னைப் பொறுத்தவரை அவன்(சாரதி குமாா்) நல்லது பண்றானோ, கெட்டது பண்றானான்னு எனக்கு அக்கறை இல்ல. நான் தளபதியிடம் சொன்னேன். சாரதி எனக்கு வேண்டும். வாணியம்பாடிக்கும் அவன் வேண்டும். அவனால்தான் என் பையன் ஜெயிச்சான். கட்சியையும் காப்பாற்றினான்” என்றார்.
இப்போதைக்கு அனைவரும் அமைதியாகச் செல்லுமாறும் பழையபடி சாரதி கட்சிப் பொறுப்பிற்கு வருவார் எனவும் துரைமுருகன் உறுதியளிக்கிறார். அவர் கூறி முடித்த உடனே, சாரதியின் ஆதரவாளர்கள் தங்களின் கைகளைத் தட்டி “இதுதான் எங்களுக்கு வேண்டும்... நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம்...” என மகிழ்ச்சியுடன் கூறி விடைபெறுகின்றனர்.
கதிர் ஆனந்த் தந்தை துரைமுருகனுடன் இந்தச் சந்திப்பில் நிகழ்ந்தவற்றை அங்கிருந்த யாரோ ஒருவர் எடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்ற, கத்தி தற்போது துரைமுருகன் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே, வேலூர் மாவட்டச் செயலாளராக தேவராஜ் என்பவரை நியமித்தது தொடர்பாக துரைமுருகன் மீது அதிருப்தியில் இருக்கும் அம்மாவட்ட திமுகவினருக்கு, சாரதிக்கு ஆதரவாகப் பேசியது மேற்கொண்டு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய வகையில் துரைமுருகன் பேசும் வீடியோ மனைவியைக் கொடுமைப்படுத்தி புகாரில் சிக்கியவருக்கு ஆதரவாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், தலைமையின் அழுத்தத்தால் ராஜினாமா செய்யப்பட்ட ஒருவரை மீண்டும் கட்சிக்குள் வரவழைப்பதாகக் கூறியதால், தலைமையை மீறி செயல்படும் துரைமுருகனின் செயல் திமுகவினரிடையே விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கட்சியின் உயரிய பொறுப்புகளில் இருக்கும் துரைமுருகன், இதுபோன்றவர்களுக்கு துணைபோவது, கட்சியின் உண்மை விசுவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அரசியல் களத்தில் மற்றொரு திமுக வாரிசு!