வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 7ஆவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வேலூர் வந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழக வேந்தர் விசுவநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் மேளதாளங்கள் முழங்க அழைத்து வந்தனர்.
இதில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கோப்பையைத் திறந்து வைத்து பேசினார். இதன் பின்னர் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கபடும் இலவச மிதிவண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், மேயர், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, கவுன்சிலர் அன்பு, மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதே போன்று மாவட்டத்தில் பொன்னை திருவலம் ஆகிய பகுதிகளிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை விட்டுக்கொண்டு தான் உள்ளனர். கர்நாடக அரசு தண்ணீரை கொடுக்கிறது. பாஜக நடத்துவது என்ன யாத்திரை என்பதை எங்கள் தலைவரே சொல்லிவிட்டார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, என்எல்சி போராட்டம், அதிமுகவுக்கு அனுமதி மறுப்பு குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் கூறாமல் எழுந்து சென்றார்.