வேலூர்:கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என வேலூர் ஆட்சியர் விசைத்தறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது ஆறு மாத கால சிறை தண்டனை அல்லது ரூபாய் 5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், செய்திக்குறிப்பும் வெளியிட்டுள்ளார்.
அதில், "கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மத்திய அரசால் 1985 ஆம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு முதல் 11 ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளன. இச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கைத்தறி துறையில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஈரோடு, சேலம், திருச்செங்கோடு, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களான கரை, பாவுபேட்டு, டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி ரகம், ஊடை பேட்டு மற்றும், புட்டா மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகம், கரை பாவு பேட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் இதுவரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.