வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (அக்.22) சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கும் நிகழ்வு மற்றும் குற்றவழக்குகளில் மீட்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்களை உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் பொருட்களை வழங்கி, காவலர்களை கௌரவித்தார். சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.
வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் குற்றவழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட 1 கோடியே 90 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்பிலான 124 சவரன் நகைகள், 101 இருசக்கர வாகனங்கள், 384 செல்போன்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைப்படைக்கப்பட்டன. தொடர்ச்சியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையை (Integrated Police Command Control and Responding Centre) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் காவல் சரக்கத்தில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக எஸ்பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், வடக்கு மண்டல ஐஜி கண்ணண், விழும்புரம் டிஐஜி பாண்டியன் உள்ளிட்ட 4 மாவட்ட எஸ்பிக்கள் கலந்துகொண்டனர்.
போதையில்லா தமிழ்நாடு:அதன்பின் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாடி காவல் நிலையம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் காவல் நிலையம் ஆகிய இரண்டு காவல்நிலைய பகுதிகளில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அந்த காவல்நிலையங்கள் "போதைப்பொருள் இல்லா காவல் நிலையங்கள்" என பாராட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் தமிழ்நாட்டில் உள்ள 1,484 காவல் நிலையத்தையும் போதைப்பொருள் இல்லா காவல் நிலையங்களாக மாற்றுவோம். அடுத்த கட்டமாக போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற அதிகாரிகளுக்குள் போட்டி வைத்துள்ளோம். இன்னொரு 6 மாத காலத்தில் போதைப்பொருள் இல்லாததாக தமிழ்நாடாக மாற்றுவது எங்கள் நோக்கமாக உள்ளது.