வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டு மிக தீவிரமாகக் காணப்படுகிறது கடந்த ஆண்டைப் பொறுத்தவரை ஜனவரி முதல் டிசம்பர் வரை 350க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலேயே 700க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தீவிரம் காட்டத் தொடங்கினார்.
அதன்படி நாள்தோறும் அனைத்து துறை அலுவலர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குழு அமைத்தார். பின்னர் டெங்கு கொசுக்களை அழிப்பதற்காக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார அலுவலர்கள் ஆகியோர் மூலம் அந்தந்த பகுதிகளில் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். நாள்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் ஐம்பது வீடுகளில்ஆய்வு செய்து டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அதை மருந்து மூலம் அழிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது முக்கிய வேலையாகும். இதில் சரிவர கவனம் செலுத்தாமல் வேலை பார்க்கும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக மாற்றிவிட்டு மாற்று ஊழியர்களை நியமித்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.