வேலூர்:பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியைச் சேர்ந்தவர், மோகன். இவரது மனைவி வளர்மதி. இத்தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும் உள்ளனர். வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்குத் தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 சவரன் தங்கத்திற்காக, அவரது காதினை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார். வளர்மதியை விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) இருதயராஜ் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளார் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.