தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து, இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர் நிரம்பி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேலும் குளிர்ச்சியான சூழல் மாவட்டம் முழுவதும் நிலவிவருகிறது.
வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் நீர்மட்டம் உயர்வின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தாலும், தொடர் மழையை கண்டு விவசாயிகள் அஞ்சுகின்றனர். இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்; மழை பெய்வது நல்லதுதான் ஆனால், தொடர் மழையால் நாங்கள் கடன் வாங்கி விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள பருத்தி உதிர்ந்து சேதமடைந்தது.
அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தது, சோள கதிர்கள், கருகி கருப்பு மை போல் உள்ளது. மேலும், தொடர் மழையால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் உணவின்றி தவித்து வருகின்றன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சொந்த செலவில் சேதமடைந்த சாலையைச் சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்... பொதுமக்கள் பாராட்டு!