வேலூர்:வேலூரில் உள்ள பென்ஸ் பார்க் தனியார் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியாதவது, "இந்தியாவில் எந்த ஒரு சாமானியனுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை வந்தாலும் நீதிமன்றம் போ, நீதிமன்றம் போ என்று கூறுகின்றனர்.
இப்படி கூறுவதற்கான காரணம் என்ன. பின்னர் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் பல்லாங்குழி ஆடுவதற்காகவா இருக்கிறது. கேரள மீனவர்கள் எல்லைத் தாண்டி தமிழ்நாடு எல்லைக்குள் வருகிறார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் உதயநிதியை, ஸ்டாலின் பாராட்டி பேசி வருகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழர்தான். அவர் கர்நாடகாவுக்கு சென்றால் தன்னை ஒரு கன்னடர் என்று சொல்லிக் கொள்கிறார். ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை. இப்படி பேசி வருவதற்கு, பாஜக-வில் தமிழ்நாட்டிற்கு மாற்றாக கர்நாடகத்திற்கு மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கலாம்.
நான் உலகின் எந்த ஒரு ஓரத்திற்கு சென்றாலும் தமிழன் என்று சொல்லி வருகிறேன். கர்நாடகா காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறது. தமிழ்நாட்டை மத்திய அரசு பாலைவனமாக மாற்றிவிட்டது. நாட்டுக்காக காமராஜர் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மத்திய அரசு வரி விதிப்பை மக்கள் மீது தொடர்ந்து திணித்து வருகிறது.
எதற்கு வரி பிரிட்டிஷ்காரன் காலத்தில் இருந்தே வரி என்பது கிடையாது. ஆனால் தற்போது நம்மை நாமே ஆளும் காலத்தில், வரி நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றது. எதற்கெடுத்தாலும் வரி, நாட்டில் லஞ்சம், ஊழல் ஒழிந்ததா? என்றால் இல்லை. ஆயிரம் கொடுத்து வெற்றி பெறுவது ஏன்?. இவ்வாறு செய்தால் எப்படி லஞ்சம், ஊழல் ஒழியும்.
மாநாடு என்றுக் கூறி 13 ஆயிரம் குடிசைகளை அகற்றி, அவர்களை லாரியில் கொண்டு சென்று தெருவில் இறக்கி விட்டது தான் தற்போது நடந்த பெரும் சாதனை என்று சொல்லலாம். மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. நாட்டில் 80 கோடி ஏழை மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்வது கிடையாது. ஒரு திட்டம் ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது கிடையாது.