இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் விவசாயிகள் சங்கமம் பொதுக்கூட்டம் ஆகியவை வேலூர் மாவட்டத்திலுள்ள மாங்காய் மண்டி அருகே நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் மற்றும் ஆரணி எம்.பி விஸ்ணுபிரசாத், திருவள்ளுவர் எம்.பி ஜெயகுமார், முன்னாள் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய கே.எஸ் அழகிரி, " தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகால தலையெழுத்தை மாற்ற காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், பாஜக-அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்திய மக்கள் முழுவதும் ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே வாக்களித்தனர். தமிழ்நாட்டில் அறிவித்தது போல் இந்தியா முழுவதும் அறிவித்திருப்பின் இந்திய அளவில் காங்கிரஸ் அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கும்.
பாஜகவின் வெற்றியையும் தடுத்திருக்கும். இந்திய பொருளாதாரம் அகல பாதாளத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியும், உலக வங்கியும் தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாயிகளுக்கு விளை பொருள்களுக்கான அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், பிரதமர் மோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குழைக்கும் விதமாக, அதானி, அம்பானிகளின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்துகிறார். பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை அழித்து, நாட்டை சீர்குலைத்து வருகின்றனர்.
மதங்களைக் கொண்டு மக்களை பிரித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் மக்கள் வீழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, பெரியார் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள் சிலைகளுக்கு காவிச்சாயம் பூசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பாஜக ஈனத்தனமான அரசியலில் ஈடுபடுகிறது.
பாஜக அலுவலகம் மீது காங்கிரஸ் பகலிலேயே கறுப்புச் சாயம் வீசும். அப்போது, பாஜக என்ன செய்யும். பாஜக வன்முறையை விரும்புகிறதா " எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டை ஆண்டுவரும் அதிமுக அரசும், வேளாண் சட்டத்தை ஆதரித்து பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. அவர்கள் தங்களது சுயமரியாதையை இழந்துவிட்டனர். ஏர்கலப்பை ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை உணவு வழங்குவதையே செய்கிறது.
அதனால் தான் காங்கிரஸ் ஏர்கலப்பையை கையில் எடுத்துள்ளது. ஆனால், பாஜகவினர் வேலை கையிலெடுத்து, மக்களை பிரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. கூட்டணி கட்சியான திமுக, அண்மையில் தமிழ்நாட்டின் ஆளுநரிடம் அதிமுக மீதான ஊழல் புகார்களை உரிய ஆதாரத்துடன் ஒப்படைத்து, விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவையும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினரையும் வீழ்த்த காங்கிரஸ் கட்சி பலமடைய வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் " என்றார். முன்னதாக மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலியும், மேடைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ யசோதா உருவ படத்திர்க்கு மலர் தூவி மரியதையும் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் ஏர்கலப்பை, நெற்கதிர்களுடன் போராட்டம்!