வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவரசன் என்பவரின் இளையமகள் திவ்யா(12) அவரது சகோதரி புவியரசி(15) ஆகியோருக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இருவரையும் பெற்றோர் அனுமதித்துள்ளனர். அங்கு காய்ச்சல் குணமாகததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி அங்கு திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரி புவியரசு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் சிறுமியின் பெற்றோர் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் டெங்கு பாதிப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு இதுவரை 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.