திருப்பத்தூர்: கடந்த மாதம் 29 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு, வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வம், முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்களே... நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறி இருந்தீர்கள். அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு, உங்களுக்கு வாக்களிக்காத எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னீர்செல்வத்தின் வாழ்த்துகள்.
நீங்கள் வேலூர் வருகை தந்த போது, எந்தவித போக்குவரத்து இடையூறுகள் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம். எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் வந்து சென்றதற்கான அறிகுறிகளே எங்களுக்கு தெரியவில்லை. இவை அனைத்தும் தங்களின் உத்தரவின் பேரில்தான் நடந்திருக்கும் என்பதை நான் அறிகிறேன்.