இந்தியா முழுவதும் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு விழுக்காட்டை அதிகரிக்கும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் "தேர்தல் கல்வி அறிவு குழுக்கள்" அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் இடம்பெறும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் விழிப்புணர்வு பாடல்களைப் பாடி உற்சாகமூட்டினர். நிகழ்ச்சியின்போது தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதில், " இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வியறிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 5 ஆயிரத்து 796 உயர்நிலைப்பள்ளிகள், 7 ஆயிரத்து 809 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் சுமார் 13 ஆயிரம் பள்ளிகளில் இந்தக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கோவை, திருச்சி, வேலூர், மதுரை ஆகிய மாவட்டங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.