தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் சாட்சியம் தாழ்ந்ததல்ல - சென்னை உயர் நீதிமன்றம் - 7 years imprisonment

சராசரி மனிதனின் சாட்சியத்தைவிட, மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தரம் தாழ்ந்தது இல்லை எனக் கூறி பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 11, 2021, 4:26 PM IST

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எம்.சி.ஏ. படித்து வந்துள்ளார். அந்த பெண் சென்னை வில்லிவாக்கம் பள்ளி ஒன்றில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக சங்கீத பயிற்சி வழங்குவதை கேள்விப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு பயில விரும்பிய அவர், கடந்த ஆண்டு மார்ச்சில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆட்டோவை ஓட்டிய அன்புச்செல்வன், பள்ளிக்குச் செல்லாமல் வேறு பாதையில் பயணித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்னை ரயில்வே தண்டவாளம் அருகே அழைத்துச் சென்று, கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர்களால் பார்வை மாற்றுத்திறனாளி பெண் மீட்கப்பட, அன்புச்செல்வன் தப்பி ஓடி தலைமறைவானார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தினர், அன்புச்செல்வனைக் கைது செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம், அன்புச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புச்செல்வன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

செவி வழி சாட்சியாக கருதி விடுதலை செய்ய கோரிக்கை

விசாரணையின்போது, ”பாதிக்கப்பட்ட பெண் பார்வை மாற்றுத்திறனாளி என்பதால் அவரது சாட்சியை நேரில் கண்ட சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது, செவி வழி சாட்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சம்பவத்தன்று ஆட்டோவை ஓட்டியது அன்புச்செல்வன் இல்லை.

பாலியல் தொந்தரவு செய்ததை அந்த வழியாக வந்த நபர்கள் நேரில் பார்க்காமல், பாதிக்கப்பட்ட பெண் சொன்னதாகவே சாட்சியம் அளித்துள்ளனர். இதனால் அவர்களது சாட்சிகளையும் செவி வழி சாட்சிகளாக கருதி, அன்புச்செல்வனை விடுதலை செய்ய வேண்டும்” என அன்புச்செல்வன் தரப்பில் வாதிடப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்தது நிரூபணம்

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, “வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பார்வை இல்லாவிட்டாலும், அவரது அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்தோரிடம் கொடுமையை எடுத்து கூறியபோது, அன்புச்செல்வன் அங்கு இருந்தது நிரூபணம் ஆகியுள்ளது.

சம்பவத்தன்று ஆட்டோவை அன்புச்செல்வன் தான் ஓட்டினார் என ஆட்டோவின் உரிமையாளரும், வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் தலைவரும் சாட்சியம் அளித்துள்ளனர். இதனால் சம்பவத்தன்று ஆட்டோ ஓட்டவில்லை என அன்புச்செல்வன் கூறுவதை ஏற்க முடியாது.

மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததல்ல

பார்வை மாற்றுத்திறனாளியானாலும் குரலின் சத்தத்தினால் அடையாளம் கண்டதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த சாட்சியத்தை புறம் தள்ள முடியாது. சராசரியான மனிதனின் சாட்சியத்தைவிட, எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகளின் சாட்சியத்தை தரம் தாழ்ந்ததாக கருத முடியாது.

அப்படி கருதினால் அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்ற அடிப்படை கொள்கையே முரணாகி விடும். பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணுக்குள் வேண்டுமானால் இருள் இருக்கலாம். ஆனால், அவரது சாட்சியத்தில் வெளிச்சம் உள்ளதாக கருதி, அவரது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சிறை தண்டனை உறுதி

பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனர் அன்புச்செல்வனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையில், ஒரு நாளைக் கூட குறைக்க விரும்பவில்லை” என கூறி தீர்ப்பளித்தார்.

இழப்பீடு வழங்க உத்தரவு

மேலும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை வழங்க தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கை திறமையாகவும், விரைவாகவும் புலன் விசாரணை செய்த வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

நேரடி சாட்சியம், செவி வழி சாட்சியம் என ஒதுக்காமல், வழக்கின் தன்மைக்கு ஏற்ப பிற சாட்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், இந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’தமிழர்களை சாதிரீதியாக கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது’ - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!

ABOUT THE AUTHOR

...view details