வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையின்போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.
பணப்பட்டுவாடா புகார்: முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு - மக்களவைத் தேர்தல்
வேலுர்: வாட்ஸ்அப் வீடியோவால் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக கூட்டணிக் கட்சியினருடன் உரையாடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக வாணியம்பாடி வட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகன், நீதிமன்ற அனுமதி பெற்று சம்பத்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தற்போது சம்பத்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.