வேலூர்: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும், திமுகவைச் சேர்ந்த பூஞ்சோலை சீனிவசன் என்பவரின் சிமெண்ட் கிடங்குகளில் சோதனை நடத்தி 11.55 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்பு அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டு, பின்பு தேர்தல் நடந்து அதில் கதீர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
11.55 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், வருமானவரி துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக எம்பி கதிர் ஆனந்திற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில், இது தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜே.எம். ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கில் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜராகினர். இவ்வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு மீண்டும் வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "மது விற்பனையை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு கிடையாது" - அமைச்சர் முத்துசாமி!