வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவருபவர் முருகன். இவரது சிறை அறையிலிருந்து 2019 அக்டோபர் 18 அன்று சிறைக் காவலர்கள் சோதனையின்போது ஒரு செல்போன், பேட்டரி, சிம்கார்டு ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
இது தொடர்பாக வேலூர் மத்திய சிறைத் துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின்கீழ் முருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கரோனா தொற்று காரணமாக கடந்த காலங்களில் சிறையில் இருந்தவாறே முருகனுக்கு காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்றது. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள சூழலில், தன்னை நேராக நீதிமன்றத்தில் முன்னிறுத்தும்படி முருகன் சிறைத் துறை அலுவலர்களிடம் கூறியுள்ளார்.