வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆக. 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக நாம் தமிழர் ஆகிய மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது. அதனால், இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக, அதிமுக அமைச்சர்கள் வேலூரில் முகாமிட்டுள்ளனர். அதன்படி நேற்று அனைத்து துறை அமைச்சர்களும் வேலூர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
வேலூரில் உடுமலை ராதாகிருஷ்ணன் பரப்புரை அதைத் தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், "உருது படிக்கும் மாணவர்களுக்கு உறுது மொழி புத்தகம் வரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து மாணவர்களுக்கும் உருது மொழி புத்தகம் கிடைக்கும்" என்றார்.