இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"வேலூர் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.46.51 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தில் நவீனப்படுத்தும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மார்கம் தவிர வேலூரிலிருந்து இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பொது நலன் கருதியும், சில மாறுதல்களைக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
அதன்படி ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் மக்கான் அருகில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
மேலும் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளும் மற்றும் அனைத்து நகர பேருந்துகளும் தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, ஆற்காடு, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், அரக்கோணம் மற்றும் திருத்தணி ஆகிய ஊர்களுக்குத் தொடர்ந்து இயக்கப்படும்.
இவை அனைத்தும் வரும் நவம்பர் 4 (புதன்கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களை கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைப்பிடித்தும் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.