வேலூர்:நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலுக்காக பாஜகவினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார். அமித்ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடத்தப்படும் இடத்தை தேர்வு செய்வது, நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் இன்று(ஜூன் 4) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மாவட்டத் தலைவர் மனோகரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில், அமித்ஷா பங்கேற்க உள்ள பொதுக் கூட்ட மேடையை கந்தனேரி பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொதுக் கூட்ட மேடை அமைப்பது மற்றும் வரவேற்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளில் பாஜக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.